Sep 25, 2026
Thisaigal NewsYouTube
வியாபாரி கொலை வழக்கு: 27 வயது ஆடவர் மீது ஜாசின் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

வியாபாரி கொலை வழக்கு: 27 வயது ஆடவர் மீது ஜாசின் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மலாக்கா, தாமான் ரிம் பாருவில் உள்ள சிகை அலங்கரிப்பு கடைக்கு வெளியே, 24 வயது வியாபாரி வினுர்த் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கோகிலநாதன் என்ற 27 வயது வேலையற்ற ஆடவர் மீது இன்று ஜாசின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

மாஜிஸ்திரேட் மசானா சினின் முன்னிலையில் நிறுத்தப்பட்ட கோகிலநாதன் மீதான இந்த குற்றச்சாட்டு வழக்கு, உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு வருவதால் அவரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படித்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கோகிலநாதன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இதற்கிடையில், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய மற்றொரு வழக்கிலும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அவருக்கு ஜாமீன் அனுமதிக்கப்பட்ட போதிலும் கொலை வழக்கு நிலுவையில் உள்ளதால் அவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related News