கோலாலம்பூர், அக்டோபர்.07-
போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக நாளை புதன்கிழமை அதிகாலையில் சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலிடப்படவிருக்கும் ஒரு மலேசியப் பிரஜையான பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு கரம் நீட்டுவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்று அரச மலேசிய போலீஸ் படை அறிவித்தது.
எல்லைத் தாண்டிய போதைப் பொருள் வழக்கு தொடர்பில் சாங்கி சிறைச்சாலையில் உள்ள பன்னீர் செல்வத்தை அரச மலேசிய போலீஸ் படை இரண்டு முறை நேர்காணல் கண்டது. இந்த இரண்டு நேர்காணல்களிலும் பன்னீர் செல்வம் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மதிப்பீடு செய்ததில், அவற்றில் ஏற்கத்தக்க நியாயமான காரணங்கள் இருப்பதாக இல்லை என்று மலேசிய போலீஸ் படை முடிவுக்கு வந்துள்ளதாக உள்துறை துணை அமைச்சர் ஷம்சூல் அனுவார் நசாரா இன்று மாலையில் அறிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு மக்களவை சேம்பர்ஸில் புக்கிட் குளுகோர் எம்.பி.ராம் கர்ப்பால் சிங் கொண்டு வந்த அவசர தீர்மானத்தை, மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட போது, உள்துறை துணை அமைச்சர் ஷம்சூல் அனுவார், மலேசிய போலீசாரின் நிலைப்பாட்டை அறிவித்தார்.
பேரா, ஈப்போவைச் சேர்ந்த பன்னீர் செல்வத்தை இரண்டு முறை பேட்டி கண்ட புக்கிட் அமான் போலீசாரிடம், அந்த மலேசியப் பிரஜை முக்கியமானத் தகவலை வெளியிட்டதாகவும், அந்த தகவலை மையமாகக் கொண்டு, விசாரணையை முடுக்கி விடுவதற்கு அந்த இளைஞரின் தூக்குத் தண்டனை நிறைவேற்றதை ஒத்தி வைக்கும்படி சிங்கப்பூர் அரசாங்கத்தை உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று ராம் கர்ப்பால், தமது அவசரத் தீர்மானத்தில் வலியுறுத்தியிருந்தார்.








