கோத்தா கினபாலு, செப்டம்பர்.15-
சபா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வீசி வரும், தொடர் புயலின் காரணமாக, அங்கு பல்வேறு மாவட்டங்களில் புதிய நிலச்சரிவுகளும், வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை நிலவரப்படி, பாப்பார் மற்றும் மெம்பாக்குட் ஆகிய மாவட்டங்கள் பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அதே வேளையில், செபங்கார் மற்றும் பெனம்பாங் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
டாமாய், லுயாங், பெனம்பாங், Beaufort மற்றும் பாப்பார் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகள், வர்த்தகப் பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சபா மாநில, பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினருடன் அரசு சாரா இயக்கங்களும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.








