ஷா ஆலாம், ஜனவரி.25-
ஷா ஆலம், செக்ஷன் 16-இல் உள்ள தளவாடத் தொழிற்சாலை ஒன்றும் கார் பழுது பார்க்கும் பட்டறை ஒன்றும் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 85 விழுக்காடு சேதமடைந்தன. மதியம் 12.32 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்ற தீயணைப்புத் துறை, ஆறு நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டதாக சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு – மீட்புப் படைத் துணை இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
ஷா ஆலம், கிள்ளான், பெட்டாலிங் ஜெயா உள்ளிட்ட பல நிலையங்களைச் சேர்ந்த 34 தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேரம் போராடி மதியம் 1.13 மணியளவில் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தீ விபத்திற்கான காரணமும் சொத்து இழப்பு குறித்த விபரங்களும் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன.








