கோலாலம்பூர், நவம்பர்.18-
மருந்தகங்களுக்கு நேரடியாகச் சென்று மருத்துவ ஆலோசனைப் பெறாமல் தொலைத் தொடர்பு ஆலோசனை வாயிலாக மருத்துவ விடுப்புச் சான்றிதழ் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு மலேசிய மருத்துவர் சங்கம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.
பதிவுச் செய்யப்பட்ட ஒவ்வொரு மருத்துவரும் தங்களின் தொழில்முறை பொறுப்புக்கு இணங்கி நடப்பதை உறுதிச் செய்வதற்கு நீண்ட காலமாக தேவைப்படும் ஒரு முக்கிய நினைவூட்டலாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது என்று மலேசிய மருத்துவர் சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் திருநாவுக்கரசு ராஜு தெரிவித்துள்ளார்.
மருத்துவச் சேவைகளை வழங்குவதில் பெரு நிறுவனமயமாக்கல் மற்றும் வணிக டிஜிட்டல் தளங்கள் அதிகளவில் செல்வாக்கு செலுத்தி வரும் இவ்வேளையில் தொலைத் தொடர்பு ஆலோசனை வழி மருத்துவ விடுப்பு அங்கீகரிப்பது உண்மையிலேயே கவலை அளிக்கிறது.
இது போன்ற சூழலுக்கு ஒரு போதும் அனுமதி அளிக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.








