பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று அக்டோபர் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார். நாட்டின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு தலைமையேற்றப்பின்னர் பிரதமர் சமர்ப்பிக்கும் இரண்டாவது வரவு செலவுத் திட்டமாக இது விளங்குகிறது.
இவ்வாண்டு மார்ச் மாதம் 2023 ஆம் ஆண்டுக்கான துணை பட்ஜெட் ஒன்றை பிரதமர் முதல் முறையாக தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 38 ஆயிரத்து 801 கோடி வெள்ளி மதிப்பிலான பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார், இன்று சமர்ப்பிக்கவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் மொத்த ஒதுக்கீடு, சற்று கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்று தாக்கத்திற்கு பிறகு நாட்டின் பொருளாதாரத்தை மீட்சிப்படுத்துவதற்கு பல்வேறு முன்னெடுப்புகளை அரசாங்கம் மேற்கொண்ட போதிலும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தில் எந்தவொரு ஏற்றமும், மாற்றமும் இல்லை என்றும் தொடர்ந்து அதிருப்தி நிலையே நிலவி வருவதாகவும் பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக மக்களின் வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்து விட்ட நிலையில் ஆகக்கடைசியாக அரிசி உட்பட இதர அத்திவாசியப்பொருட்களின் திடீர் விலை உயர்வு, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளதாக பரவலாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், சாமானிய மக்களின் வாழ்க்கைச் செலவினங்கள் உயர்வை கட்டுப்படுத்துவதுடன், அவர்களின் நடப்பு பொருளியல் சிரமங்களுக்கு தீர்வு காணவும், ஏற்றமிகு வாழ்வுக்கும் வழி வகுக்கவும், தேவையான உதவித் திட்டங்களை அறிவிக்கவும் ஒரு நற்செய்தி களமாக அமைய வேண்டும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர்.







