கோலாலம்பூர், ஜூலை.16-
இஸ்தானா நெகாராவில் இன்று நடைபெற்ற 269 ஆவது ஆட்சியாளர்கள் மாநாட்டில் தேசியப் பாதுகாப்பு விவகாரங்கள், நீதிபதிகள் நியமனம் மற்றும் வேப் மின் சிகரெட்டைத் தடை செய்வது உட்பட பல விவகாரங்கள் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளன.
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றதாக அரச முத்திரைக் காப்பாளர் டான் ஶ்ரீ சையிட் டானியல் சையிட் அஹ்மாட் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசியப் பாதுகாப்பு குறித்து போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயிலும், இராணுவத் தளபதி ஜெனரல் டான் ஶ்ரீ முகமட் நிஸாம் ஜஃபாரும் ஆட்சியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
இதே போன்று கூட்டரசு நீதிமன்றம், அப்பீல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், சபா, சரவாக் உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதிகள் நியமனங்கள், காலியாக இருந்து வரும் தலைமை நீதிபதி மற்றும் அப்பீல் நீதிமன்றத் தலைவர் ஆகிய பதவிகள் நிரப்பப்படுவது குறித்தும் ஆட்சியாளர்கள் முக்கியமாக விவாதித்ததாக டான் ஶ்ரீ டானியல் தெரிவித்தார்.








