Oct 9, 2026
Thisaigal NewsYouTube

தலைமை நீதிபதியின் பதவிக் காலம் என்பது பிரதமரின் உணர்வுகளைப் பொறுத்ததா? அம்பிகா விமர்சனம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தலைமை நீதிபதியின் பதவிக் காலம் என்பது பிரதமரின் உணர்வுகளைப் பொறுத்ததா? அம்பிகா விமர்சனம்

கோலாலம்பூர், ஜூலை.11-

நாட்டின் தலைமை நீதிபதியின் நியமனம், அவரின் பதவிக் காலத்தை நீடிப்பது முதலியவை பிரதமரின் உணர்வுகளைப் பொறுத்தது என்று கூறப்படுவது குறித்து மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தலைமை நீதிபதியின் தலையெழுத்து என்பது, அவர்கள் பிரதமரை முகம் சுளிக்க வைக்கும் அறிக்கைகளை வெளியிடுகிறார்களா? இல்லையா? என்பதைப் பொறுத்தது என்று கூறப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாததாகும் என்று அம்பிகா குறிப்பிட்டார்.

இத்தகைய கருத்துகள் நீதித்துறை சுதந்திரத்திற்கு மிக ஆபத்தானவையாகும் என்று அம்பிகா எச்சரித்தார்.

முன்னாள் தலைமை நீதிபதி தெங்கு மைமூன் துவான் மாட்டின் பதவிக் காலத்தை நீடிக்க முடியாமல் போனதற்கு, கடந்த ஏப்ரல் மாதம் மல்தாவில் நடைபெற்ற அனைத்துலக நீதித்துறை மாநாட்டில், நீதிபதிகள் நியமன விவகாரத்தில் பிரதமரின் தலையீடு இருப்பது போலவும், பிரதமரின் தலையீடு இருப்பது அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சே காரணமாக அமைந்தது என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஸிஸ் தெரிவித்து இருப்பது தொடர்பில் அம்பிகா கருத்துரைத்தார்.

மல்தாவில் தெங்கு மைமூன் கூறிய கருத்துக்கள் தனிப்பட்டவை அல்ல. அவை நீதித்துறையின் சுதந்திரத்தை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது பற்றியாகும். நீதித்துறையை வலுப்படுத்துவதும், மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தற்போதைய நிலைப்பாடாக இருந்து வருகிறது.

நாட்டின் தலைமை நீதிபதி ஒருவர் நீதித்துறையை வலுப்படுத்துவதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய விஷயங்களைப் பேசுவது, அது பிரதமரைப் புண்படுத்துவதாக பொருள் கொள்ளப்படுவது அறிவுக்கு பொருந்தாத விஷயமாகும்.

நாட்டில் நடந்தவற்றைதான் தெங்கு மைமூன் அந்த அனைத்துலக மாநாட்டில் பேசினாரே தவிர தலைமை நீதிபதி என்ற முறையில் அவர் தனது எல்லை வரம்பை மீறி விடவில்லை என்று அம்பிகா தற்காத்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →