கூலிம், செப்டம்பர்.30-
மலேசியா தூய்மைப்படுத்தும் தினம் சுற்றுச்சூழலை தூய்மைத் தொடர்பிலான விழிப்புணர்வை அதிகரிக்கவே கொண்டாடப்படுவதாக கெடா மாநில மனிதவளம், இந்தியர், சீனர், சயாமியர் சமூக விவகாரம் மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்களின் ஆட்சிக்குழு உறுப்பினரும் கூலிம் சட்டமன்ற உறுப்பினருமான வோங் சியா ஜென் தெரிவித்தார்.
பல்லின மக்கள் நல்லிணக்கத்தோடு வாழும் நம் நாட்டை நேசிக்கும் வகையில், அந்த நாடு எல்லா வகையிலும் நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பாகவும் தூய்மையாக இருக்க வேண்டும். அந்த வகையில் தான் மலேசியா தூய்மைப்படுத்தும் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சின் கீழ் மலேசியா தூய்மைப்படுத்தும் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் இறுதி சனிக்கிழமை மாவட்டம் மாநிலம் மற்றும் தேசிய அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தினம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட தினமாகும். அந்த வகையில் கூலிம் மாவட்ட நிலையில் மலேசியாவைத் தூய்மைப்படுத்தும் தினம் கடந்தாண்டு சுங்கை சீடீம் நீர் வீழ்ச்சி சுற்று வட்டாரத்தில் நடத்தப்பட்டது. இவ்வாண்டு கூலிம் மாவட்ட நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில் தாமான் தாசேக் புத்ராவில் நடத்தப்பட்டது.

இந்த தாமான் தாசேக் புத்ரா ஒரு முக்கியமானத் தளமாக மக்களுக்கு அமைந்துள்ளது. குறிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ளவும், குடும்பத்தினரோடு வந்து தங்களின் நேரத்தைச் செலவிடவும் மற்றும் ஒரு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் இந்த இடம் அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த இடத்தைத் தூய்மைப்படுத்த இந்த தினம் இப்பகுதியில் நடத்தப்படுவதாகத் தெரிவித்த அவர் இதில் பங்கு பெற்ற மூவின மக்களுக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் அவர் கூறுகையில் இவ்வாண்டு கெடாவிற்கு வருகை புரியும் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கெடாவிற்கு வருகை புரியும் சுற்றுப்பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாநில அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் இம்மாநிலம் பாதுகாப்புக்கும், சுகாதாரத்திற்கும் தூய்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் இம்மாநிலம் சுற்றுப்பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்து வருவதாக வோங் சியா ஜென் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது. துப்புரவுப் பணியில் அதிக அளவில் கூப்பைகளை எடுத்து வருகின்றவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் மறுசுழற்சிப் பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வந்தவர்களுக்கு அதை நிறுத்து அதற்கேட்டவாறு இ-வோளட்டில் பணம் சேர்க்கப்பட்டது. இதில் பயன்படுத்திய சமையல் எண்ணெய்யும் அடங்கும். அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சிறப்பு அதிர்ஷ்டக் குலுக்கல் நடத்தப்பட்டு சிறப்பான பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக வோங் சியா ஸென் மலேசியாவைத் தூய்மைப்படுத்தும் தினத்தை முன்னிட்டு தாமான் தாசேக் புத்ராவில் மரக்கன்றை நட்டார்.








