செர்டாங், ஜனவரி.25-
தனது தந்தை வீட்டில் பலமுறை கீழே விழுந்து விட்டதாகக் கூறி நாடகமாடிய ஒரு நபரின் பொய் அம்பலமாகியுள்ளது. மருத்துவப் பரிசோதனையில் அந்த முதியவர் கடுமையாகத் தாக்கப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து, அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி Muhamad Farid Ahmad வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி 19-ஆம் தேதி மதியம் 3 மணியளவில், செராஸ், Canselor Tuanku Muhriz மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 76 வயதுடைய முதியவர் ஒருவர் அரை மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டார்.
40 வயதான அவரது மகன், தனது தந்தை ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள தங்களின் வீட்டில் பலமுறை கீழே விழுந்ததாகக் கூறி அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளார்.
இருப்பினும், முதியவரின் உடலில் இருந்த காயங்களைக் கண்ட மருத்துவர்கள் சந்தேகமடைந்தனர். அவரது உடலில் இருந்த தழும்புகள் கீழே விழுந்ததற்கான அறிகுறிகளாக இல்லாமல், ஏதோ ஒரு மழுங்கிய பொருளால் தாக்கப்பட்டதற்கான அடையாளங்களாக இருந்தன.
இதனைத் தொடர்ந்து, அன்றைய இரவு 9.30 மணியளவில் செர்டாங் மாவட்ட குற்றப் புலனாய்வுப் போலீஸ் பிரிவினர் அந்த மகனை மருத்துவமனை வளாகத்திலேயே கைது செய்தனர். விசாரணையில், சம்பந்தப்பட்ட சந்தேக நபருக்கு ஏற்கனவே குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான 11 முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது தெரிய வந்தது.
சிகிச்சை பெற்று வந்த முதியவர், கடந்த ஜனவரி 22-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது தலையில் பலமான பொருளால் தாக்கப்பட்டதே மரணத்திற்கு காரணம் என உடற்கூறு ஆய்வில் உறுதியானது.
முதலில் காயப்படுத்துதல் பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, தற்போது கொலை வழக்காக குற்றவியல் பிரிவு 302- க்கு மாற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் வரும் ஜனவரி 30-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று ஏசிபி Muhamad Farid தெரிவித்தார்.








