கோலாலம்பூர், ஆகஸ்ட்.21-
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினிடம் தாம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதற்கு முன்னதாக தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சியின் அறிக்கைக்காகத் தாம் காத்திருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் தாம் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் ஆய்வை மேற்கொண்டுள்ள எம்சிஎம்சியின் அறிக்கையின் முடிவுக்காகத் தாம் காத்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
எம்சிஎம்சி முடிவு எவ்வாறு அமையும் என்பதைப் பார்த்து இந்த விவகாரத்தை முடிவு செய்யலாம். டான் ஶ்ரீ முகைதீன் யாசினும் தமக்கு எதிராகப் பல்வேறு அவதூறுகளைக் கூறியுள்ளார். அவரும் அதற்கு மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று அன்வார் குறிப்பிட்டார்
டான் ஶ்ரீ முகைதீன் யாசின், நாட்டின் பிரதமராக இருந்த போது மிக மலிவாகக் கிடைக்கக்கூடிய உதவித் தொகைக்கு உரிய பெட்ரோல் ரோன் 95- சலுகையை அந்நிய நாட்டவர்களும் அனுபவித்து வருவதைத் தற்காத்துப் பேசியுள்ளார் என்று அன்வார் குற்றஞ்சாட்டியிருப்பதாக அந்த முன்னாள் பிரதமர் கூறியுள்ளார்.
எனினும் தாம் எந்த சமயத்திலும் அவ்வாறு செய்யவில்லை என்றும் அன்வாரின் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்றால் அவர் தம்மிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் முகைதீன் சவால் விடுத்துள்ளார்.








