மலேசியாவை வழிநடத்துவதற்கு 17 ஆவது மாமன்னராக தாம் செய்யப்பட்டது ஒரு பதவி உயர்வு அல்ல. மாறாக, நாட்டின் தலைவர் என்ற முறையில் நேரத்தையும், பலத்தையும் அர்ப்பணிக்க வேண்டிய ஒரு பெரும் கடப்பாடாகும் என்று மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டார் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள 222 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் நலன்களை பாதுகாப்பது தம்முடைய முன்னுரிமை அல்ல. மாறாக, இந்நாட்டில் உள்ள 3 கோடியே 30 லட்சம் மலேசிய மக்களின் நலன் சார்ந்த அம்சங்களுக்கே முன்னுரிமையாகும். அவற்றை பாதுகாப்பதே தமது முதன்மையான கடமையாகும் என்று சுல்தான் இப்ராஹிம் தெளிவுபடுத்தினார்.
தாம் ஏற்கனவே பாசீர் கூடாங்கில் உரை நிகழ்த்தியது போல நாட்டில் பிளவுகளையும், பேதங்களையும் ஏற்படுத்தக்கூடிய வைரஸ் கிருமி ஒன்று நாட்டில் பரவியுள்ளது என்பதை தாம் உணர்ந்துள்ளதாக சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.
மக்களின் நலன்களைவிட தங்களின் நலன்களே முக்கியம் என்று கருதி அதிகாரத்தை கைப்பற்றி, தங்களின் நிலையை உறுதி செய்து கொள்வதற்காக அவதூறுகளை பரப்பி, மக்களை பிளவுப்படுத்தி, பேதங்களை விளைவிக்க துணிந்து விட்ட அரசியல்வாதிகளால் இந்த வைரஸ் உருவாகியுள்ளதாக சுல்தான் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
இத்தகைய சூழலில் நாட்டு மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதே தமது தலையாய கடமையாகும் என்று சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.
இன்று ஜோகூர்பாருவில் டேவான் சிங்காசனா இஸ்தானா பெசார் ஜொஹோரில் நடைபெற்ற சுல்தானின் 65 ஆவது பிறந்த தின கொண்டாட்ட நிகழ்வில் சுல்தான் இப்ராஹிம் மேற்கண்டவாறு கூறினார். அவரின் உரை, சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் முகநூலில் வெளியிடப்பட்டுள்ளது.








