Feb 10, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் அமைச்சர் இசா சமாட் சிறை சென்றது குறித்து ஸாஹிட் அனுதாபம்
தற்போதைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் இசா சமாட் சிறை சென்றது குறித்து ஸாஹிட் அனுதாபம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.10-

முன்னாள் ஃபெல்டா (Felda) தலைவரும், நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசாருமான டான் ஸ்ரீ முகமட் இசா சமாட்டிற்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 15.45 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை கூட்டரசு நீதிமன்றம் இன்று உறுதிச் செய்ததைத் தொடர்ந்து சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு உடனடியாக கொண்டுச் செல்லப்பட்ட அந்த முன்னாள் மத்திய அமைச்சருக்காக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தனது அனுதாபத்தைத் தெரிவித்து கொண்டார்.

இந்த சோதனையான காலக் கட்டத்தில் இசா மற்றும் அவரது குடும்பத்தினர் மன உறுதியுடன் இருக்க பிரார்த்திப்பதாக அவர் கூறினார்.

புறநகர் மேம்பாட்டுத்துறை அமைச்சின் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அம்னோ தலைவரமான ஸாஹிட், இக்கட்டான சூழலில் அம்னோவின் முன்னாள் மூத்த தலைவர்களில் ஒருவரான இசாவின் குடும்பத்தினர் பொறுமையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டதோடு, அவர்களுக்காகத் தான் பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டார்.

முன்னதாக,லஞ்ச ஊழல் வழக்கில் இசாவை விடுவித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, அவருக்குத் தண்டனை வழங்கி, கூட்டரசு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அந்த முன்னாள் அமைச்சரை உடனடியாக சுங்கை பூலோ சிறைக்குக் கொண்டுச் செல்ல உத்தரவிட்டனர்.

கடந்த 2018-ஆம் ஆண்டு, 3 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி தொடர்பான ஒன்பது குற்றச்சாட்டுகள் இசா மீது சுமத்தப்பட்டன. 2014-இல் சரவாக், கூச்சிங்கில் உள்ள Merdeka Palace Hotel & Suites ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியை ஃபெல்டா முதலீட்டு நிறுவனம் வாங்கிய விவகாரத்தில் அதன் தலைவர் என்ற முறையில் இசா இந்த முறைகேடுகளைப் புரிந்ததாகக் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைக் கேட்டதும், அதிர்ச்சிக்குள்ளான இசாவின் குடும்பத்தினர் நீதிமன்ற வளாகத்தில் கண்ணீர் விட்டு அழுதனர்.

Related News