கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் நிலையற்ற சூழல் காரணமாகச் சிலாங்கூரில் சுமார் 26,000 குத்தகையாளர்கள் தங்களது வணிக நடவடிக்கைகளை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் 50,000-க்கும் அதிகமான குத்தகையாளர்கள் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 24,000 ஆகக் குறைந்து, 50 சதவீதத்திற்கும் மேலாகச் சரிவைக் கண்டுள்ளது.
விலை உயர்வின் ஒட்டுமொத்த சுமையையும் குத்தகையாளர்களே சுமக்க வேண்டியுள்ளதால், நிலவும் நிதி நெருக்கடி காரணமாகப் பலர் தங்களது உரிமங்களைப் புதுப்பிக்கத் தவறியுள்ளனர்; சிலர் அரசு திட்டங்களின் சலுகைக் கடிதங்களையும் திருப்பி ஒப்படைத்துள்ளனர். இச்சூழலைத் தவிர்க்க, அரசாங்கம் குத்தகைகளை வெளியிடுவதற்கு முன்பு தற்போதைய சந்தை விலைப்பட்டியலை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மலேசிய மலாய் குத்தகையாளர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ முகமது ரோஸ்டி அப் அஜீஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், விலை மாறுபாட்டு முறையை மீண்டும் கொண்டு வரவும், ஜி1 வகுப்பிலிருந்து G2 வகுப்புக்கு குத்தகைகாரர்களை உயர்த்துவதற்கான காலக்கெடு நிபந்தனைகளை மாற்றி அவர்களின் திறமையின் அடிப்படையில் தரம் உயர்த்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.








