லிண்டுங் 24 ஜாம் என்ற 24 மணி நேர முழு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், கடந்த மூன்று வாரங்களில் 136 இழப்பீட்டு கோரிக்கைகளுக்குப் பெர்கெசோ ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மொத்தம் 672,743.10 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் பெறப்பட்ட விண்ணப்ப கோரிக்கைகளில் 62.9 விழுக்காட்டு விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் விளக்கினார்.
வேலை செய்யும் நேரத்தில் மட்டுமின்றி, விடுமுறை நாட்கள், விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் அன்றாடப் பயணங்களின் போது ஏற்படும் விபத்துகளுக்கும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்யவே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் இதன் மூலம் முன்பு இருந்த காப்பீட்டு இடைவெளி வெற்றிகரமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஜோகூரில் சாலை விபத்தில் உயிரிழந்த இரு ஊழியர்களின் குடும்பங்களுக்கும், சபாவில் மலையேற்றத்தின் போது காயமடைந்த ஊழியர் மற்றும் பேராக்கில் வழுக்கி விழுந்து காயமடைந்த ஊழியர் ஆகியோருக்கும் இத்திட்டத்தின் கீழ் உரிய மருத்துவச் சிகிச்சையும் வருமான இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளன.
விபத்துகள் எந்த நேரத்திலும் நிகழலாம் என்பதால், முதலாளிகளும் ஊழியர்களும் இத்திட்டத்தின் கீழ் தகுந்த பங்களிப்பைச் செலுத்துவதை உறுதி செய்யுமாறு டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.












