கோலாலம்பூர், மார்ச்.22-
சுங்கை பீசி -உலு கிள்ளான் அதிவேக நெடுஞ்சாலையான SUKE-யில், அதிவேகமாக வந்த நீல நிறக் கார் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சாலையில் தூக்கி வீசப்பட்டு அசைவற்றுக் கிடக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சுமார் 1 நிமிடம் 18 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வலதுபுறப் பாதையில் ஒரு சிவப்பு நிறக் காரை முந்திச் செல்ல முயல்வது தெரிகிறது. அப்போது பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு கார், அந்த சிவப்பு நிறக் காரைக் கடந்து செல்ல முற்பட்ட போது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த மோதலின் தாக்கத்தால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காரின் முன் பகுதியான Bonnet- டில் தூக்கி வீசப்பட்டு, பின்னர் சாலையில் விழுந்தார். அவர் சாலையில் அசைவற்று கிடந்த நிலையிலும், மோதிய அந்த நீல நிறக் கார் நிறுத்தப்படாமல் அதிவேகமாக தப்பிச் சென்றது அங்கிருந்த மற்ற வாகனத்தின் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.








