சுபாங் ஜெயா, ஆகஸ்ட்.18-
சுபாங் ஜெயாவில் கல்லூரி மாணவி கொலை தொடர்பில் போலீசார் இதுவரை 12 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 20 வயது மதிக்கத்தக்க அந்த மாணவியின் கொலை தொடர்பில் போலீசார் தொடர்ந்து தீவிர புலன் விசாரணை நடத்தி வருவதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் மாமாட் தெரிவித்தார்.
12 பேரிடம் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டுள்ள நபர், அந்த மாணவிக்கு அறிமுகமான நபராக இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி, சுபாங் ஜெயா, யுஎஸ்ஜே 2/1 உள்ள ஒரு வீட்டில் அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கழுத்துப் பகுதியில் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. அவர் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்களும் உள்ளன என்பது சவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.








