கோலாலம்பூர், ஆகஸ்ட்.28-
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நகர்ப்புற மறுசீரமைப்புச் சட்ட மசோதா, நகர்ப்புறங்களில் மோசமடைந்து வரும் வாழ்க்கை நிலைகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்தைக் கொண்டதே தவிர மலாய்க்காரர்களின் உரிமையைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டது அல்ல என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெளிவுபடுத்தினார்.
நகர்ப்புறம் மீதான சட்டம் மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கான பரிந்துரைகளை அரசாங்கம் வரவேற்கிறது. ஆனால், அந்த பரிந்துரைகள் நகர்ப்புற மக்களின் வாழ்வியலை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள நகர்புற சீரமைப்புச் சட்டம் எல்லா நிலைகளிலும் சரியானது என்று தாம் வாதிடவில்லை. ஆனால், அந்தச் சட்டத்தை நடப்புச் சூழலுக்கு ஏற்ப பலப்படுத்துவதற்கு இன்னும் எத்தகைய மாற்றங்கள் தேவை என்பதை தாராளமாகப் பரிந்துரைக்கலாம். அவ்வாறு முன்வைக்கப்படும் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளைத் தாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக பிரதமர் விளக்கினார்.
எனினும் அரசாங்கம் பரிந்துரைத்துள்ள இந்த உத்தேசச் சட்ட மசோதா, மலாய்க்கார்களின் உரிமைகளைக் குறைக்க வல்லது, அவர்களை ஒடுக்கக்கூடியது என்பது போன்று ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் . அவ்வாறு கூறுவது உண்மை அல்ல என்று பிரதமர் குறிப்பிட்டார்.
நகர்ப்புறங்களில் வசிக்கும் மலாய்க்காரர்கள் மோசமான சூழ்நிலையில் இருப்பதைக் காண தாம் விரும்பவில்லை என்றும், அத்தகைய வாழ்வியல் போக்கிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவது தனது கடமை என்பதைத் தாம் உணர்வதாக இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்தார்.
முன்னதாக இந்த உத்தேசச் சட்டம், மலாயய்க்கார்களின் உரிமைகளை ஒடுக்குவதைப் போன்று உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.
நகர்ப்புற மறுசீரமைப்புச் சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்கு விடுவதற்கு முன்னதாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கண்டறிய அந்த மாசோதாவைத் தாக்கல் செய்வதிலிருந்து தாமதப்படுத்த முடியுமா என்று டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் வினவினார்.








