கோலாலம்பூர், டிசம்பர்.27-
1எம்டிபி நிதி தொடர்பான குற்றங்களுக்காக நேற்று வெள்ளிக்கிழமை 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மற்றும் 11.38 பில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரஸாக் மலேசிய மக்கள் அனைவருக்கும் ஒரு திறந்த மடலை எழுதியுள்ளார்.
புத்ராஜெயாவில் உள்ள நீதித்துறை வளாகக் கட்டத்தில் நடைபெற்ற விசாரணைக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், நஜீப்பின் வழக்கறிஞர் டான் ஶ்ரீ முஹமட் ஷாஃபி அப்துல்லாவால் அக்கடிதம் வாசிக்கப்பட்டது. அத்துடன் நஜீப்பின் முக நூல் பக்கத்திலும் அந்தக் கடிதம் பதிவேற்றப்பட்டது.
அந்தக் கடிதத்தில், முன்னாள் அம்னோ தலைவரான நஜீப், கனத்த இதயத்துடன் தம்முடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதே வேளையில், தனது போராட்டம் பழிவாங்கும் நோக்கம் கொண்டது அல்ல. மாறாக, அது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்று நஜீப் வலியுறுத்தியுள்ளார்.
“சில நேரங்களில் இந்த போராட்டத்தை நான் தனியாகச் சுமக்க வேண்டியிருப்பதாக உணர்கிறேன். இருப்பினும், பழிவாங்கும் உணர்ச்சியாக அல்லாமல், கொள்கைகளுக்காக இதனைத் தொடர உறுதியாக இருக்கிறேன் என்று அவர் கூறினார்.
சட்டத்தால் வழங்கப்பட்ட உரிமைகளை மட்டுமே தாம் கோருவதாகவும், நீதியை நிலைநாட்டவும், அரசியலமைப்பின் நேர்மையைப் பேணவும் மற்றும் சட்டத்தின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி என்று நஜீப் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.








