கோலாலம்பூர், ஜூலை.20-
வரும் ஜுலை 26 ஆம் தேதி கோலாலம்பூர் மாநகரில் பெரிக்காதான் நேஷனல் ஏற்பாட்டில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள பேரணியின் மூலம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை வீழ்த்த முடியாது என்று நாட்டின் மூத்த பத்திரிகையாளர் எ. காடீர் ஜாசின் திட்டவட்டமாகக் கூறுகிறார்.
நாட்டு மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர் என்பதைப் போல் தோற்றம் ஏற்படுத்தலாம். ஆனால், அந்தத் தோற்றமே அன்வாரை வீழ்த்தி விட முடியும் என்ற நப்பாசை வேண்டாம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
உண்மையிலேயே அன்வார் தலைமையிலான அரசை வீழ்த்த நோக்கம் கொண்டு இருப்பவர்கள், அடுத்த 16 ஆவது பொதுத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும். அதுதான் ஜனநாயக நடைமுறையாகும்.
காரணம், அன்வார் இன்னமும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டு இருக்கிறார். நாடாளுமன்றமே அவரின் தலையெழுத்தைத் தீர்மானிக்குமே தவிர பேரணி அல்ல என்று நாட்டின் நிலவரங்களைத் துல்லியமாகக் கணிப்பவரான காடீர் ஜாசின் குறிப்பிட்டுள்ளார்.








