சிரம்பான், ஜனவரி.08-
நீலாயில், 10 வயது சிறுவனைச் சித்திரவதைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் தம்பதிக்கு எதிராக, 7 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவைப் போலீசார் பெற்றுள்ளனர்.
அச்சிறுவனின் 30 வயதான தாயாரும், 22 வயதான வளர்ப்புத் தந்தையும், வரும் ஜனவரி 14-ஆம் தேதி வரையில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படுவார்கள் என நீலாய் போலீஸ் தலைவர் ஜொஹாரி யாஹ்யா தெரிவித்துள்ளார்.
நேற்று ஜனவரி 7-ஆம் தேதி, மதியம் 2 மணியளவில், நீலாயிலுள்ள ஒரு வீட்டில், அத்தம்பதி கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவு விநியோகம் செய்யும் நபர் ஒருவர், சாலையில் உலவிக் கொண்டிருந்த அச்சிறுவன் குறித்து போலீஸ் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், துவாங்கு ஜாஃபார் மருத்துவனைக்குப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அச்சிறுவன், பெற்றோரால் துன்புறுத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.








