கோலாலம்பூர், ஜனவரி.14-
மலேசிய ஆயுதப்படையில் அண்மைய காலமாக எழுந்த கொள்முதல் ஊழல் புகார்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ காலிட் நோர்டின் இன்று அமைச்சரவையில் விரிவான விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அமைச்சரவை, மன நிறைவு கொண்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.
குறிப்பாக, சுபாங் விமானப்படைத் தளத்திற்குள் நடந்ததாகக் கூறப்படும் ஒழுக்கமற்ற செயல்கள் மற்றும் இராணுவக் கொள்முதல் தொடர்பான ஊழல் விசாரணைகள் ஆகியவை அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டன.
தற்காப்பு அமைச்சர் காலிட்டின் விளக்கத்தை அடுத்து, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த விவகாரத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் Tan Sri Muhammad Hafizuddeain Jantan ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் வகையில் முன்கூட்டியே ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளது குறித்தும் இந்த விளக்கத்தில் கூறப்பட்டதாக டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.








