நீலாய், ஜனவரி.03-
நீலாய், டேசா பால்மா அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 62 வயது சந்தேக நபரைத் தொடர்ந்து தடுத்து வைப்பதற்கு போலீசார் மேலும் 7 நாட்கள் தடுப்புக் காவல் அனுதியைப் பெற்றுள்ளனர்.
நாளை ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலத்திற்கு அந்த நபரைத் தடுத்து வைப்பதற்கு சிரம்பான் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் சாரா அஃபிகா ஸுல்கிஃப்லி அனுமதி வழங்கியிருப்பதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
சந்தேக நபருக்கு வழங்கப்பட்டிருந்த முந்தைய தடுப்புக் காவல் அனுமதி, இன்றுடன் முடிவடைந்த நிலையில், அதனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
'அயாங்' என்று அழைக்கப்படும் இந்த நபர், வெடிமருந்துகளைத் தயாரிப்பதில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவரது வாடகை வீட்டிலிருந்து ஏற்கனவே 31 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன என்று டத்தோ அல்ஸாஃப்னி தெரிவித்தார்.








