கோம்பாக், செப்டம்பர்.29-
பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டு வருவதைப் போல மாநகரங்களுக்குள் நுழையும் தனிநபர் வாகனங்களுக்கு, கட்டணம் விதிக்கும் நடைமுறையை அமல்படுத்த அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெளிவுபடுத்தினார்.
தற்போதைக்கு இது போன்ற கட்டண முறையை அரசாங்கம் அமல்படுத்துமானால் அது மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுவதாக பிரதமர் விளக்கினார்.
எனினும் எதிர்காலத்தில் மலேசியாவின் பொது போக்குவரத்து முறை ஒட்டுமொத்தத்தில் மிக ஆக்கப்பூர்வமான செயல்பாட்டை கொண்டு இருக்குமானால் அக்காலக் கட்டத்தில் இது போன்ற கட்டணங்கள் விதிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக பிரதமர் கோடி காட்டினார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு, இது போன்ற கட்டண விதிப்பை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சி செய்ததையும் டத்தோ ஶ்ரீ அன்வார் நினைவு கூர்ந்தார். எனினும் அந்த காலக் கட்டத்தில் பொது போக்குவரத்து முறை குறிப்பாக பேருந்துச் சேவை திருப்திகரமான செயல்பாடுயின்றி போக்குவரத்து நெரிசலுக்கும், மக்களுக்கு பெரும் அசெகரியத்தையும் ஏற்படுத்தியதால் அந்த உத்தேசத் திட்டம் கைவிடப்பட்டதையும் டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
முன்பு, பேருந்துக்கு வரிசைப் பிடித்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறி விட்டது. முன்பை விட பொது போக்குவரத்து சீராகவும், செளகரியமாகவும் உள்ளது. எனவே கட்டண விதிப்பு முறை எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.








