மலாக்கா, அக்டோபர்.11-
மலாக்காவில் மூன்றாம் படிவ மாணவி ஒருவர், இரண்டு மூத்த மாணவர்களால் ஒரு கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் போலீசார் நான்கு நபர்களைக் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம், கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் மலாக்கா, அலோர் காஜாவில் உள்ள ஒரு பள்ளியின் வகுப்பறையில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் மற்றும் அருகில் இருந்த மேலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு போலீசார் வாக்குமூலம் பதிவுச் செய்துள்ளதாக முன்னணி ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று மாணவர்கள் மத்தியில் பகிரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து பின்னர் மாணவியின் தாயாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினமே இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.








