கோலாலம்பூர், நவம்பர்.06-
கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் காணாமல் போன சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மற்றும் பாதிரியார் ரேய்ம்ண்ட் கோ ஆகியோர் வழக்குகளில், உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புகளை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக சட்டத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதியின் முடிவை மறுபரிசீலனை செய்த பிறகு, தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இவ்வழக்கில், கடந்த செவ்வாய்க்கிழமை, உயர்நீதிமன்ற நீதிபதி சூ தியாங் ஜூ வழங்கிய தீர்ப்பில், அரசாங்கமும், போலீஸ் துறையும், அம்ரி சே மாட்டின் மனைவி நோர்ஹாயாத்தி முகமட் அரிஃபினுக்கு 3 மில்லியன் ரிங்கிட்டும், ரேய்மண்ட் கோ குடும்பத்திற்கு 31 மில்லியன் ரிங்கிட்டும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெர்லிஸில் அம்ரி சே மாட் கடத்தப்பட்டதாக நம்பப்பட்ட நிலையில், 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பெட்டாலிங் ஜெயாவில் பாதிரியார் ரேய்மண்ட் கோ மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
இந்த இரு கடத்தல் சம்பவங்களும் நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.








