பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்.23-
பூடி மடானி ரோன்95 திட்டத்தின் கீழ் மானிய விலையில் கிடைக்கும் பெட்ரோல் ரோன்95 எரிபொருளை, மக்கள் நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே வாங்க முடியும் என்ற வரையறையை நிர்ணயிக்க அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று நிதி அமைச்சு இன்று தெளிவுபடுத்தியுள்ளது.
அதே வேளையில் மலேசியர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிச் செய்வதற்காக மானிய விலையில் விற்கப்படும் எரிபொருளை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
பெட்ரோல் ரோன்95 விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்காகவே அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறான செய்தியாகும் என்று நிதி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பூடி மடானி ரோன்95 திட்டத்தின் கீழ் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு ரோன்95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 காசிலிருந்து 1 ரிங்கிட் 99 காசாகக் குறைக்கப்படவிருக்கிறது.
செல்லத்தக்க வாகனமோட்டும் உரிமம் கொண்ட 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்கள் மானிய விலையில் பெட்ரோல் ரோன்95 எரிபொருளை வாங்குவதற்குத் தகுதியுடையவர்கள் ஆவார்.
சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா எனும் சாரா உதவித் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் அதே வழிமுறையிலேயே மைகாட் அட்டையைப் பயன்படுத்தி அவ்வகை பெட்ரோலை மலேசியர்கள் வாங்க முடியும்.
ஒவ்வொரு மலேசியரும் மாதத்திற்கு 300 லிட்டர் மானிய விலையில் ரோன்95 பெட்ரோலைப் பெற உரிமை உண்டு, இருப்பினும் இ-ஹெய்லிங் வாகனச் சேவைகள் இந்த வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.








