பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்.17-
ஐந்து வயது மகளைக் காரில் அமரச் சொல்விட்டு, கணவனும், மனைவியும் சிற்றுண்டி வாங்கச் சாலையோரத்தில் உள்ள கடைக்குச் சென்றிந்த வேளையில் மகள் அமர்ந்திருந்த காரை திருடிக் கொண்டு ஆடவர் தப்பிய விட்ட நிலையில் அத்தம்பதியர் பெரும் பதற்றத்திலும் பீதியிலும் மூழ்கினர்.
இந்தச் சம்பவம் நேற்று காலை 7.24 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, கம்போங் லிண்டுங்கான், ஜாலான் பிஜேஎஸ் 6/4 இல் நிகழ்ந்தது. எனினும் மகளுடன் காரை எடுத்துக் கொண்டு நபர் செல்வதைக் கண்ட ஆடவர், உடனடி உதவிக்காக போலீசாருடன் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்துள்ளார்.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் செயல்பாட்டுக்கு அறைக்குக் கிடைத்த தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட வாகனத்தைக் கண்காணிக்க போலீசார் உடனடியாக ஓப் தூத்துப் நடவடிக்கையைத் தொடங்கியதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சம்சுடின் மாமாட் குறிப்பிட்டார்.
போலீசாரின் சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு பொதுமக்களின் உதவியின் விளைவாக பெட்டாலிங் ஜெயா மெந்தாரி கோர்ட் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் அந்த வாகனம் கண்டறியப்பட்டது. அந்த வாகனத்தைப் போலீசார் சோதனையிட்ட போது சிறுமி வாகனத்திலேயே பாதுகாப்பாக இருப்பது உறுதிச் செய்யப்பட்டது. பின்னர் அந்தச் சிறுமி, அவரின் பெற்றோரிடம் சேர்க்கப்பட்டதாக ஏசிபி சம்சுடின் தெரிவித்தார்.
இதில் சம்பந்தப்பட்டுள்ள சந்தேகப் பேர்வழியைப் பிடிப்பதற்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்








