கோலாலம்பூர், ஜனவரி.19-
கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் அரசாங்கத்தின் வழிகாட்டல் அடிப்படையில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கான புதிய தளம் தயாராக உள்ளதாகவும், மடானி பள்ளிவாசல் கட்டுமானம் மற்றும் ஆலய இடமாற்ற விவகாரங்கள் சட்டப்பூர்வமாகவும், சமய நல்லிணக்கத்தைப் பேணும் வகையிலும் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹான்னா இயோ தெரிவித்துள்ளார்.

ஆலயத்தின் வழிபாட்டுத் தேவைகளை உறுதிச் செய்யும் வகையில், அரசாங்கம் புதிய தளத்தை ஒதுக்கியுள்ளதுடன் அதற்கான அனுமதிகளையும் விரைவுபடுத்தியுள்ளது என்று அமைச்சர் ஹான்னா இயோ குறிப்பிட்டார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல், ஆலயக் கட்டிடத் திட்டத்திற்கான அனைத்து அனுமதிகளையும் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில் கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி புதிய ஆலயத் தளம் 'இஸ்லாமியர் அல்லாதோர் வழிபாட்டுத் தலம்' என அரசாங்க இதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

மேலும் இவ்வாண்டு ஜனவரி 14 ஆம் தேதி ஆலய கட்டிட நிர்மாணப் பணிகளுக்கான இறுதி அனுமதி வழங்கப்பட்டது.
நாட்டின் இந்திய சமூகத்தின் நலன் மற்றும் ஒற்றுமை தனது முன்னுரிமைகளில் ஒன்று எனத் தெரிவித்துள்ள ஹான்னா இயோ, இந்த விவகாரத்தைத் தாம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆலய இடமாற்றம் மற்றும் புதிய கட்டுமானப் பணிகளைச் சீராக மேற்கொள்வது குறித்து ஆலோசிக்க, அனைத்துத் துறை ஏஜென்சிகளும் பங்கேற்கும் ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.

இந்தப் பணிகள் அனைத்தும் பரஸ்பர மரியாதையுடனும் நல்லிணக்கத்துடனும் நடைபெறுவதை உறுதிச் செய்ய, தைப்பூசத் திருவிழாவிற்குப் பிறகு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் அரசாங்கம் மீண்டும் விரிவான பேச்சுவார்த்தைகளைத் தொடரும் என்று ஹான்னா இயோ குறிப்பிட்டார்.
ஆலயத்திற்கான புதிய இடத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக, முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸாலிஹா முஸ்தஃபா மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்ற முன்னாள் டத்தோ பண்டார் டத்தோ ஶ்ரீ மைமூனா ஷாரிஃப் ஆகியோருக்கு ஹான்னா இயோ தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் இந்த விவகாரத்தில் கோலாலம்பூரின் நல்லிணக்கத்தைப் பேண உறுதுணையாக இருந்த அமைச்சர்கள் கோபிந்த் சிங், டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மற்றும் மஇகா தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் ஆகியோரின் அர்ப்பணிப்பை ஹான்னா இயோ பாராட்டினார்.
கருத்து வேறுபாடுகளை முதிர்ச்சியுடனும், பரஸ்பர மரியாதையுடனும் கையாள்வதுடன், 'தன்னைப் போலவே பிறரையும் நேசி' எனும் கொள்கையின் அடிப்படையில் பொதுநலனுக்கு முன்னுரிமை அளிக்கும் கூட்டரசு பிரதேச நிர்வாகத்தின் அணுகுமுறையை இது பிரதிபலிக்கிறது என்று ஹான்னா புகழாரம் சூட்டினார்.








