Feb 11, 2026
Thisaigal NewsYouTube
ஓப் செலாமாட் 25: 2.8 மில்லியன் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும்
தற்போதைய செய்திகள்

ஓப் செலாமாட் 25: 2.8 மில்லியன் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும்

Share:

சுங்கை பூலோ, பிப்ரவரி.11-

இன்று பிப்ரவரி 11 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சீனப் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் 'ஓப் செலாமாட் 25' நடவடிக்கையை அரச மலேசிய போலீஸ் படை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

இக்காலக் கட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 2.8 மில்லியன் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைந்தது 5 சதவீதம் வரை குறைக்க போலீஸ் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

அதிவேகம், ஆபத்தான முறையில் முந்துதல் மற்றும் வாகனம் ஓட்டும் போது கைபேசி பயன்படுத்துதல் போன்ற விதிமீறல்களுக்கு எதிராக எவ்வித சமரசமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐஜிபி எச்சரித்தார்.

இன்று காலையில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் சுங்கை பூலோ மேம்பால உணவக வளாகத்தில் சீனப் புத்தாண்டையொட்டி ஓப் செலாமாட் 25 எனும் பாதுகாப்பு பிரச்சார இயக்கத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் காலிட் இஸ்மாயில் இதனைத் தெரிவித்தார்.

ஐஜிபி.யின் உரையை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றவியல் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் கமிஷனர் டத்தோ ஶ்ரீ முஹமட் யுஸ்ரி ஹஜி ஹசான் பஸ்ரி வாசித்தார்.

சாலைப் பாதுகாப்புடன் மட்டுமல்லாமல், பண்டிகைக் காலத்தில் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் போது வீடுகள் உடைக்கப்படுவதைத் தடுக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக 2,670 MPV ரோந்து வாகனங்கள் மற்றும் 1,800 மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவுகள் என மொத்தம் 6,543 போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று காலிட் இஸ்மாயில் விளக்கினார்.

பொதுமக்கள் தங்களின் பயணங்களுக்கு முன்னதாக அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது VSP எனும் Volunteer Smartphone Patrol செயலி வாயிலாகவோ தகவல் தெரிவிக்குமாறு காலிட் இஸ்மாயில் வலியுறுத்தினார்.

முன்னதாக சீனர்களின் பாரம்பரிய நடனங்கள் நிகழ்வுடன் சீனப் புத்தாண்டு கால பாதுகாப்பு நடவடிக்கையை காலிட் இஸ்மாயில் சார்பில் முஹமட் யுஸ்ரி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பிளஸ் மலேசியா நிறுவனத்தின் நிர்வாகி டத்தோ முஹமட் நசீர் அப்துல் லதிஃப், சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஶ்ரீ டாக்டர் முஹமட் அஸ்மான் அஸிஸ் முஹமட் உட்பட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Related News

ஓப் செலாமாட் 25: 2.8 மில்லியன் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் ... | Thisaigal News