கோலாலம்பூர், ஜூலை.26-
கோலாலம்பூர் மாநகரில் டத்தாரான் மெர்டெக்காவில் இன்று பிற்பகலில் தொடங்கவிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிரான துருன் அன்வார் பேரணியையொட்டி மக்கள் காலை 11 மணிக்கே திரளத் தொடங்கினர்.
மதியம் 12.30 மணி வரையில் மாநகரின் மையப் பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரளத் தொடங்கியுள்ளனர். பெரிக்காத்தான் நேஷனல் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இந்தப் பேரணி, நான்கு முக்கிய இடங்களிலிருந்து டத்தாரான் மெர்டேக்காவை நோக்கி மக்கள் ஊர்வலமாகச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊர்வலம் தொடங்குவதற்கு முன்னதாகவே சிலர் கவன ஈர்ப்புக்காக ஃபோர் வீல் டிரைவ் வாகனத்தில் நின்று கொண்டு ஒலிப் பெருக்கியில் பேசிக் கொண்டு டத்தாரான் மெர்டோக்காகை நோக்கி வலம் வருவதைக் காண முடிந்தது. இன்னும் சிலர் துருன் அன்வார் என்ற பதாகைகளை ஏந்திக் கொண்டு நடக்கத் தொடங்கியுள்ளனர்.
சிலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் கறுப்புக் கொடியை ஏந்திய வண்ணம் காட்சித் தந்தனர். பலர் துருன் அன்வார் என்று எழுதப்பட்ட கருப்பு நிற டி சட்டையில் காணப்பட்டனர்.

எத்தகையச் சாத்தியத்தையும் எதிர்கொள்தற்குக் கலகத் தடுப்புப் படை உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு இலக்குகளில் ஒன்று, சோகோ பேரங்காடி மையமாகும். அப்பகுதியில் மக்கள் திரண்டு வருவதைக் கண்ட பல வர்த்தகத் தளங்கள் இழுத்து மூடப்பட்டு வருகின்றன. இன்னும் சில வர்த்தகத் தளங்கள் காலையில் திறக்கப்படவில்லை.

நிலைமையைக் கண்காணிக்க அரச மலேசிய போலீஸ் படை ஹெலிகாப்டர் மூலம் கண்காணித்து வருகிறது. போலீஸ் படையின் கணிப்புப்படி கிட்டத்தட்ட 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை திரள்வார்கள் என்ற கூறப்பட்ட போதிலும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் கணிப்பின்படி பத்து லட்சம் பேர் திளர்வார்கள் என்று கூறியுள்ளார்.

முன்னதாக போக்குவரத்து சீராக நடைபெறுவதை உறுதிச் செய்வதற்கு கோலாலம்பூர் மாநகரின் 16 பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளன. கோலாலம்பூரில் சில இடங்களில் போலீசார் சாலைத் தடுப்புச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.








