கோலாலம்பூர், அக்டோபர்.13-
அடுத்த வாரம் திங்கட்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பல்கலைக்கழகங்கள், போலி டெக்னிக் மற்றும் சமூக கல்லூரிகளை உள்ளடக்கிய அரசாங்க பொது உயர்க்கல்விக்கூடங்களில் இந்து மாணவர்களுக்கு இயங்கலை முறையில் கற்றல்- கற்பித்தல் வகுப்புகள் நடைபெறும் என்று உயர்க்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்து மாணவர்கள் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி வியாழக்கிழமை முதல் அடுத்த வாரம் அக்டோபர் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை வீட்டில் இருந்தவாறு ஓன்லைனில் பிடிபி எனப்படும் இயங்கலை முறையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்ற உயர்க்கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உயர்க்கல்விக்கூட மாணவர்கள் குறிப்பாக வெகு தொலைவில் இருந்து வருகை தந்து தங்கி படிக்கும் வெளியூர் மாணவர்கள், தீபாவளித் திருநாளை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்கும், சுமார் ஒரு வார காலம் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடுவதற்கும் ஏதுவாக இந்து மாணவர்களுக்கு மட்டும் விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாக உயர்க்கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.








