கோலாலம்பூர், அக்டோபர்.10-
நாடெங்கிலும் இன்ஃபுளுவென்ஸா வகை நோய் தொற்று பரவி வரும் நிலையில், கல்வி நிறுவனங்களில் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
சிலாங்கூரில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 80 சதவிகித நோய் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அவற்றில் 65 சதவிகிதம் கல்வி நிறுவனங்களுடன் தொடர்புடையது என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பு வழிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
நோய் தொற்றுக்கான அறிகுறிகள் தெரியும் மாணவர்களை உடனடியாக தனிமைப்படுத்தவும், உடனடி சிகிச்சையளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே வேளையில், அறிகுறிகள் தென்படும் மாணவர்களைக் கண்டறியும் ஆசிரியர்கள், அவர்களுக்கு குணமாகும் வரை விடுப்பு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








