ஒட்டவா: இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் தொடரும் நிலையில், காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரத்தில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் இந்தியாவைக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் கடந்த சில காலமாகவே மோதல் போக்கே நிலவி வருகிறது. முதலில் இந்தியத் தூதரைக் கனடா வெளியேற்றிய நிலையில், அதற்குப் பதிலடி தரும் வகையில் இந்தியாவும் கனடா தூதரை வெளியேற்றியது.
இந்தியாவுக்குச் செல்வோருக்குக் கனடா பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்த நிலையில், இந்தியாவும் அதற்குப் பதிலடி தரும் வகையில் வார்னிங்கை வெளியிட்டது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டினருக்கு விசா வழங்கப்போவதில்லை என்றும் இந்தியா அறிவித்துள்ளது.
மீண்டும் சர்ச்சை: கனடாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக தாங்கள் சந்தேகிப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ தரப்பு சொன்னதே மோதலுக்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இதற்கிடையே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் அவர் மீண்டும் இந்தியா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கனடா மண்ணில் கனடா நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். நம்பகமான இடத்தில் இருந்து கிடைத்த தகவலே இதற்கு காரணம்" என்று ட்ரூடோ கூறினார்.








