போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் ராஜினாமா விவகாரத்தில் ஏன் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்தோணி லோக் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று பிரதமரிடம் வழங்கியதாகவும், இது குறித்து தாம் அவருடன் இன்னும் கலந்துரையாட வேண்டியுள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அன்வார், ஊழல் மற்றும் பொதுமக்களின் நிதி முறைகேடு போன்ற முக்கியமான விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய நிலையில், அந்தோணி லோக்கின் ராஜினாமா ஏன் அதிகமாக பேசப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.
அந்தோணி லோக்கின் அமைச்சுப் பணிகள் சிறப்பாக இருப்பதாகவும், அவரது செயல்பாடுகள் குறித்து தாம் அவருடன் கலந்துரையாடப் போவதாகவும் அன்வார் கூறினார்.
முன்னதாக, நஜிப் ரஸாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடனான மன்னிப்பைத் தொடர்ந்து, ஜசெக மத்திய செயலவை முடிவின் அடிப்படையில் அந்தோணி லோக் போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருந்தார்.








