சிரம்பான், டிசம்பர்.13-
கடந்த புதன்கிழமை சிரம்பான், ஜாலான் ராசா – மம்பாவ் சாலையில் போர்ட்டிக்சனுக்குச் செல்லும் டோல் சாவடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குண்டர் கும்பல் சம்பந்தப்பட்ட பழி வாங்கும் நடவடிக்கையே என்று சந்தேகிக்கப்படுவதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டினால் ஒருவர் பலியான நிலையில், மற்றொருவர் கடும் காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் இந்தச் சம்பவத்தில், போலீசார், இதுவரை மூன்று நபர்களைக் கைது செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மூன்று சந்தேகப் பேர்வழிகளில் ஒருவரின் வீட்டில் கைத்துப்பாக்கி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அந்தத் துப்பாக்கியே சம்பவம் நடந்த அன்று பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சந்தேகிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் சில சந்தேகப் பேர்வழிகளையும், சாட்சிகளையும் போலீசார் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.








