Feb 10, 2026
Thisaigal NewsYouTube
செந்தூலில் வீடற்ற பெண் கொலை: 46 வயது நபர் கைது
தற்போதைய செய்திகள்

செந்தூலில் வீடற்ற பெண் கொலை: 46 வயது நபர் கைது

Share:

செந்தூல், பிப்ரவரி.10-

கோலாலம்பூர், செந்தூலில் வீடற்ற பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தொடர்பில் 46 வயதுடைய வேலையற்ற நபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று அதிகாலை ஜாலான் செந்தூலில் மெதடிஸ்ட் ஆண்கள் பள்ளி மண்டபத்திற்கு அருகே சமிக்ஞை விளக்குப் பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் பெண் ஒருவர் இறந்து கிடந்தது காலை 7.20 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. அஹ்மாட் சுகார்னோ ஸாஹார் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தரையில் விழுந்து கிடந்த 50 முதல் 60 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணின் உடலில் பல காயங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். முதற்கட்ட சோதனையில், அந்தப் பெண்ணின் வலது காதுக்கு மேல் தலையில் ஆழமான வெட்டுக் காயமும், கண்ணிமைகளில் வீக்கமும் இருந்தது உறுதிச் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் அந்த ஆடவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

அவரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அஹ்மாட் தெரிவித்தார். இந்தக் கொலைக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், குற்றவியல் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அஹ்மாட் சுகார்னோ ஸாஹாரி குறிப்பிட்டார்.

Related News