கோலாலம்பூர், டிசம்பர்.01-
தலைநகரில் கடந்த வெள்ளிக்கிழமை, சுகாதார மையம் ஒன்றில் நடந்த ஒழுங்கீனச் செயல்கள் தொடர்பாக, கைது செய்யப்பட்ட 171 ஆடவர்களைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யும் போலீஸ் விண்ணப்பத்தை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் நிராகரித்தது.
அதிக எண்ணிக்கையிலான கைது என்பதால், விண்ணப்பம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைமை ஆணையர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தங்களது விண்ணப்பங்களை நிராகரித்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அந்தச் சுகாதார மையத்தில் மொத்தம் 202 ஆடவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 31 வெளிநாட்டினர் என்பதால், அவர்களை இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அவர்களில் முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.








