ஜோகூர் பாரு, ஜூலை.20-
ஜோகூர் பாரு, ஶ்ரீ ஆலாம், தாமான் மேகா ரியாவில் உள்ள ஒரு தளத்தில் கொள்ளை முயற்சியின் போது துப்பாக்கி வேட்டைக் கிளப்பியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நேற்று இரவு 7.10 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபரைப் போலீசார் அடையாளம் கண்டு வருவதாக ஶ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சொஹைமி இஷாக் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்ததாக நம்பப்படும் அந்த சந்தேக நபர், துப்பாக்கி போன்ற ஒரு சுடும் ஆயுதத்தைக் கொண்டு, அந்த தளத்தில் இருந்த நபரை, பணத்தை ஒப்படைக்கும்படி அச்சுறுத்தியுள்ளார். அதே வேளையில் எச்சரிக்கும் வகையில் ஒரு துப்பாக்கி வேட்டையும் கிளப்பி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
எனினும் இந்தச் சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என்ற போதிலும் பாதிக்கப்பட்ட நபர், இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தகவல் கொண்டுள்ளர்கள், போலீசாருடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.








