கோலாலம்பூர், ஆகஸ்ட்.26-
கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு லஞ்ச ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் உயர் அதிகாரி உட்பட மூன்று தனிநபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
அந்த மூவரும் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர். மாநகர் மன்றத்தின் உயர் அதிகாரிக்கு அப்பாற்பட்ட நிலையில் 40 வயது மதிக்கத்தக்க இதர இரண்டு நபர்களான நிறுவன உரிமையாளர் மற்றும் ஒரு மாது பிடிபட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் ஒரு மணிக்கும், 2 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் புத்ராஜெயா, எஸ்பிஆர்எம் தலைமையகம் மற்றும் கோலாலம்பூர் எஸ்பிஆர்எம் அலுவலகம் ஆகியவற்றுக்கு அழைக்கப்பட்ட அந்த மூவரும் வாக்குமூலம் பதிவுக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர்.
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் முக்கிய அதிகாரியான 50 வயது மதிக்கத்தக்க நபர், மாலை 4 மணியளவில் அவரின் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார்.
கோலாலம்பூர் மாநகர் மன்றத்திலிருந்து குத்தகைகளைப் பெறுவதற்கு அந்த நிறுவன உரிமையாளரிடமிருந்து சம்பந்தப்பட்ட அதிகாரி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் லஞ்சம் பெற்று வந்ததாக நம்பப்படுகிறது.
மூன்று நபர்களிடமிருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் ரொக்கம், இரண்டு ஆடம்பரக் கார்கள், விலை உயர்ந்த கைப்பைகள் மற்றும் காலணிகளை எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்துள்ளது.








