கோலாலம்பூர், ஜூலை.16-
கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கில் உள்ள லாலாபோர்ட் (LaLaport BBCC) வணிக வளாகத்தில், சுமார் 30 விரைவுப் பேருந்து நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடிய புதிய போக்குவரத்து முனையம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 3,000 பயணிகளுக்குச் சேவையாற்றும் இந்த முனையம், எதிர்காலத்தில் 10,000 பயணிகள் வரை கையாளும் திறன் கொண்டது என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார். கேஎல் நகரினுள் தினசரி 12 லட்சம் வாகனங்கள் நுழைவதால், இதுபோன்ற போக்குவரத்து வசதிகள் மிக அவசியமாகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
தரைப் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியான APAD, உரிமம் பெற்ற இந்த முனையத்தில், குளிர் சாதன வசதியைக் கொண்ட காத்திருப்பு அறை, தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் மற்றும் பேருந்து நேரத்தைக் காட்டும் திரைகள் உள்ளன. மேலும், பயணிகள் மழையில் நனையாமல் ஹாங் துவா எல்ஆர்டி மற்றும் மோனோரெயில் நிலையங்களை அடையலாம். கேஎல்ஐஏ விமான நிலையத்திற்கான வேன் சேவைகளும் இங்கு வழங்கப்படுகின்றன என்று அமைச்சர் விளக்கினார்.








