Jul 16, 2026
Thisaigal NewsYouTube
சுங்கைப்பட்டாணியில் பிரபல இரவுச் சந்தையில்  குடிநுழைவுத்துறையின் திடீர் சோதனை – 29 சட்டவிரோத வெளிநாட்டினர் கைது
தற்போதைய செய்திகள்

சுங்கைப்பட்டாணியில் பிரபல இரவுச் சந்தையில் குடிநுழைவுத்துறையின் திடீர் சோதனை – 29 சட்டவிரோத வெளிநாட்டினர் கைது

Share:

சுங்கை பட்டாணி, ஜூலை.16-

மலேசிய குடிநுழைவுத் துறை (JIM) கெடா மாநிலம் (Ops Kutip), (Ops Sapu), (Ops Gegar) ஆகிய அமலாக்க நடவடிக்கைகளை ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தீவிரமாக முன்னெடுத்தது.

கெடா மாநில குடிநுழைவுத் துறையின் அமலாக்கப் பிரிவு மற்றும் குடிநுழைவு அதிரடிப் பிரிவைச் சேர்ந்த 19 அதிகாரிகள் பங்கேற்ற இந்த நடவடிக்கை, சட்டவிரோத வெளிநாட்டினரை (PATI) வேலைக்கு அமர்த்தி, தங்க வைத்திருப்பதாகச் சந்தேகிக்கப்படும் முக்கிய இடங்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக கெடா மாநில குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனர் முகமாட் ரிட்சுவான் பின் முகமாட் ஜென் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் போது, கோலா மூடா மற்றும் கோத்தா ஸ்டார் மாவட்டங்களில் அமைந்துள்ள நான்கு வளாகங்கள் மாலை 4.00 மணி முதல் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

சோதனையில் மொத்தம் 124 பேர் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 81 மலேசியர்கள் மற்றும் 43 வெளிநாட்டவர்கள் அடங்குவர்.

இதில், 20 முதல் 50 வயதுக்குட்பட்ட 29 சட்டவிரோத வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டிருப்பத்தாக முகமாட் ரிட்சுவான் தெரிவித்தார். அவர்களில் 19 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் விவரம்:

வங்களாதேசம் – 8 ஆண்கள்

வியட்நாம் – 10 பேர் (7 ஆண்கள், 3 பெண்கள்)

மியான்மார் – 4 பேர் (3 ஆண்கள், 1 பெண்)

தாய்லாந்து – 6 பேர் (1 ஆண், 5 பெண்கள்)

லாவோஸ் – 1 பெண்

இவர்கள் அனைவரும் குடிநுழைவுச் சட்டம் 1959/63-இன் கீழ் குற்றம் புரிந்ததாக நம்பப்படுகிறது.

சுங்கை பட்டாணியிலுள்ள பிரபலமான ஓர் இரவுச் சந்தை வளாகத்தில் சோதனை நடத்தப்பட்ட போது, சட்டவிரோதமாக வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதாக சந்தேகிக்கப்படும் சில உள்ளூர் முதலாளிகளும் வியாபாரிகளும், குடிநுழைவு அதிகாரிகள் வருவதை அறிந்தவுடன் வெளிநாட்டு தொழிலாளர்கள் தப்பிச் செல்லுமாறு உரக்க எச்சரித்தை கெடா மாநில குடிநுழைவுத்துறை இலாகா சுட்டிக் காட்டியது.

எனினும், அதிகாரிகளின் விரைவான நடவடிக்கை, திட்டமிட்ட முறையிலான சுற்றிவளைப்பு மற்றும் திறமையான செயல்பாட்டின் காரணமாக தப்பிச் செல்லும் முயற்சி முறியடிக்கப்பட்டதுடன், குடிநுழைவுச் சட்டத்தை மீறியதாக சந்தேகிக்கப்படும் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைத்து வெளிநாட்டினரும் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பெலாந்திக் குடிநுழைவுத் தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துதல், தங்க வைத்தல் அல்லது அவர்களுக்கு உதவி வழங்குதல் குடிநுழைவுச் சட்டம் 1959/63-இன் கீழ் கடுமையான குற்றமாகும் என்றும், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது எந்தவிதச் சலுகையும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மலேசிய குடிநுழைவுத் துறை கடுமையாக எச்சரித்துள்ளது.

Related News