ஜோகூர் பாரு, செப்டம்பர்.13-
அரசாங்கம் ஏற்கனவே வாக்குறுதி அளித்ததைத் போன்று இம்மாதம் இறுதியில் பெட்ரோல் ரோன் 95 விலை, லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசுக்கு விற்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளார்.
மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் பொருட்டு மடானி அரசாங்கம் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளில் பெட்ரோல் ரோன் 95 விலையைக் குறைப்பதும் அடங்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.
சாமானிய மக்கள் தங்கள் வாகனங்களுக்குப் பயன்படுத்தும் பெட்ரோல் ரோன் 95 தற்போது லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 காசுக்கு விற்கப்படுகிறது. இம்மாதம் இறுதியில் லிட்டருக்கு ஆறு காசு குறைக்கப்பட்டு ஒரு ரிங்கிட் 99 காசுக்கு விற்கப்படும்.
செப்டம்பர் மாதத்தை நாம் தொட்டு விட்ட நிலையில், பெட்ரோல் ரோன் 95 விலையை அரசாங்கம் ஏன் இன்னும் குறைக்க வில்லை என்று சிலர் வசைப்பாடிக் கொண்டு இருக்கிறார்கள். சற்று பொறுமையாகக் காத்திருங்கள், பெட்ரோல் விலை குறைகிறதா? இல்லையா என்று பார்ப்போம் என்று ஜோகூர் பாருவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.








