கோம்பாக், ஆகஸ்ட்.16-
மலேசியாவில் 32 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் உடல் பருமன் பிரச்னையை எதிர்நோக்கியுள்ளனர் என்று தேசிய சுகாதார நோய்த் தடுப்பு மையத்தின் ஆய்வு கூறுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் 68 லட்சத்து 60 ஆயிரம் பேர் அல்லது 32.6 விழுக்காட்டினர் உடல் பருமன் தொடர்பான உபாதைகளை எதிர்நோக்கியுள்ளனர் என்று அது குறிப்பிட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையில் 45 லட்சத்து 80 ஆயிரம் பேர் அல்லது 21.8 விழுக்காட்டினர் உடல் பருமன் உடையவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.
உடல் பருமன் கொண்ட மலேசியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, தொற்றா நோய்களுக்கு எதிராக சுகாதார அமைச்சு மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கை முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டு விடுமோ என்று தாங்கள் அஞ்சுவதாக அவர் குறிப்பிட்டார்.








