தமக்கு எதிராக, பாஸ் கட்சியின் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், மாநில சட்டமன்றத்தை கலைக்க வேண்டிய நிலை ஏற்படும் என பெர்லிஸ் மாநில மந்திரி பெசார் அபு பக்கர் ஹம்சா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வரும் ஜூன் 3 முதல் 5 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத் தொடரில் இத்தீர்மானம் முன்வைக்கப்பட்டால், சட்டமன்றத்தை கலைப்பதைத் தவிர தமக்கு வேறு வழியில்லை என்று கோலா பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பெர்லிஸ் மாநிலத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகே, பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி அமைக்கப்பட்டதாகவும், தாம் மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டபோது, கூட்டணி அரசை நிலைநிறுத்தும் பொறுப்பை, பெர்லிஸ் அரசர் தம்மிடம் வழங்கியதாகவும் அபு பக்கர் ஹம்சா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அம்முடிவுகளையும் மீறி விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறும் பட்சத்தில், சட்டமன்றத்தை கலைக்கப் போவதாகவும், வேறு வழிகள் தமக்கு இல்லாததால் அம்முடிவை எடுத்தே ஆக வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் நேற்று இரவு கங்கார்-இல் நடைபெற்ற மாலம் சித்ரா வர்ணா கோலா பெர்லிஸ் 2026 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபு பக்கர் ஹம்சா செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று, நெகிரி செம்பிலான் மாநில அரசியல் முடக்கநிலையை சுட்டிக்காட்டிய பாஸ் தலைவர் அப்துல் ஹாதி அவாங், பெரிக்காத்தான் கூட்டணிக்குள் உள்ள ஒற்றுமை உணர்வை பெர்சத்து கட்சி மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும், பெர்லிசில் பாஸ் கட்சியைச் சேர்ந்த மந்திரி பெசாரை பதவியிலிருந்து அகற்றும் முயற்சிகளுக்கு, பெர்சத்து முன்பு ஆதரவு வழங்கியதை அவர் சுட்டிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.








