சுபாங், அக்டோபர்.04-
தற்போது 40 வயதை எட்டிப் பிடித்துள்ள சுபாங்கில் உள்ள அரச மலேசிய ஆகாயப்படைத் தளம், ஒரு நீண்ட கால அடிப்படையில் வியூகம் நிறைந்த பகுதியாகச் செயல்படுவதற்கு அந்த ஆகாயத்தளம், இன்னமும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது என்று ஆகாயப்படைத் தளபதி ஜெனரல் டத்தோ ஶ்ரீ முகமட் நொராஸ்லான் அரிஸ் தெரிவித்தார்.
ஒரு விமானத் தளத்தின் செயல்பாடும், மேற்கொள்ளப்படும் பணிகளின் செயல்திறனும், உள்நாட்டு மற்றும் அனைத்துலக அளவில் இலக்கை நோக்கிச் சேவையில் ஈடுபடும் விமானங்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவது மற்றும் நிர்வகிப்பது மட்டுமல்லாமல் மாறாக, இயக்குவதும் மிக முக்கியமான பணியாகும் என்று முகமட் நோராஸ்லான் குறிப்பிட்டார்.
சுபாங், அரச மலேசிய ஆகாயப்படைத் தளம் பல ஆண்டுகளாகச் செயல்பட்ட போதிலும் விமானங்கள் தொடர்புடைய வியூகப் பணிகளுக்கான அமலாக்கத்தில் அது இன்னமும் இலக்குக்குரிய பயணங்களை மேற்கொள்வதற்கு ஆற்றல் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று சுபாங் ஆகாயப்படைத் தளத்தின் 40 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.








