May 4, 2026
Thisaigal NewsYouTube
பாசிர் கூடாங்கில் தொழிலதிபரிடம் 5 லட்சம் ரிங்கிட் கொள்ளை: 24 மணி நேரத்தில் 8 பேர் கைது
தற்போதைய செய்திகள்

பாசிர் கூடாங்கில் தொழிலதிபரிடம் 5 லட்சம் ரிங்கிட் கொள்ளை: 24 மணி நேரத்தில் 8 பேர் கைது

Share:

ஜோகூர், பாசிர் கூடாங்கிலுள்ள வங்கி ஒன்றின் வெளியே பாகிஸ்தான் தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 5 லட்சம் ரிங்கிட் பணத்தைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த 8 பேரை, சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் ஜோகூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி, பாசிர் கூடாங் வர்த்தக மையத்தில் உள்ள வங்கி ஒன்றிலிருந்து தனது மனைவியுடன் வெளியேறி வாகனத்தை நோக்கிச் சென்ற 45 வயது தொழிலதிபரை மர்ம நபர்கள் இருவர் வழிமறித்துள்ளனர். துப்பாக்கி போன்ற ஒன்றைக் காட்டி மிரட்டிய அவர்கள், தொழிலதிபரிடம் இருந்த 5 லட்சம் ரிங்கிட் ரொக்கம் அடங்கிய இரு பைகளை பறித்துச் சென்றனர்.

இது குறித்துப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிறப்பு போலீஸ் குழு ஒன்று, தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப் ரஹமான் அர்சாத் தெரிவித்தார்.

உளவுத் தகவல்களின் அடிப்படையில் ஸ்ரீ ஆலாம் மற்றும் தம்போய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், 23 முதல் 53 வயதுக்குட்பட்ட 7 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த உள்ளூர் பெண் ஒருவரும் அடங்குவார். இக்கும்பலில் மூவர் வர்ததகர்கள், ஒருவர் உணவு வியாபாரி, இருவர் மெக்கானிக் மற்றும் இருவர் வேலையில்லாதவர்கள் ஆவர். கைதானவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்ட தொழிலதிபருக்கு ஏற்கனவே நன்று அறிமுகமானவர் என்பதும், மற்றவர்கள் அவருக்கு நண்பர்களாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 5 லட்சம்

ரிங்கிட் பணத்தில் 12 ஆயிரம் ரிங்கிட்டை மட்டுமே அவர்கள் செலவு செய்திருந்த நிலையில், மீதமுள்ள 4 லட்சத்து 87 ஆயிரத்து 350 ரிங்கிட் ரொக்கப் பணத்தை போலீசார் மீட்டனர் என்று டத்தோ அப் ரஹமான் அர்சாத் மேலும் தெரிவித்தார்.

Related News