ஈப்போ, ஜூலை.19-
இன்று சனிக்கிழமை அதிகாலை ஈப்போவில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, சட்டவிரோதமாகத் தங்கியிருந்த ஒரு பெண், தனது கணவரையும், இரண்டு பிஞ்சு குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டுத் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுலாவேசியைச் சேர்ந்த அந்தப் பெண், முறையான ஆவணங்கள் இல்லாததால், மலேசிய குடிநுழைவுத் துறையும் பிஜிஏ எனப்படும் பொது நடவடிக்கைப் படையும் இணைந்து நடத்திய இந்தச் சோதனையின் போது பிடிபடாமல் தப்பியோடியுள்ளார் என பேரா மாநில குடிநுழைவுத் துறையின் இயக்குநர் டத்தோ ஜேம்ஸ் லீ தெரிவித்தார்.
சோதனையில் சிக்கிய கணவனும், 2 முதல் 3 வயதுடைய குழந்தைகளும் தற்போது அதிகாரிகள் வசம் உள்ளனர். இந்த நடவடிக்கையின் போது 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சோதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 120 பேர் குடிநுழைவுச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் ஜேம்ஸ் லீ மேலும் தெரிவித்தார்.








