மங்கோலியா முன்னாள் மாடல் அழகியான அல்தாந்துயா ஷாரிபு கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட மலேசியாவின் முன்னாள் போலீஸ்காரர் ஒருவர், ஆஸ்திரேலியா சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்து அந்த முன்னாள் மாடல் அழகியின் குடும்பத்தினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
தமது மகளிள் கொலைக்கு காரணமான ஒரு நபர், மலேசிய நீதிமன்றத்தினால் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு, மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர், தற்போது சுதந்திரமாக நடமாடுவது வேதனை அளிக்கிறது என்று அந்தப் பெண்ணின் தந்தை டாக்டர் அல்தாந்துயா ஷாரிபு செதெவ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஷா ஆலம் அருகில் ஒரு காட்டுப்பகுதியில் அல்தாந்துயா கொலை செய்யப்பட்டார். அவரின் உடல் வெடிகுண்டினால் தகர்த்தப்பட்டது. இந்த படுகொலையில் சம்பந்தப்பட்டுள்ள அரச மலேசிய போலீஸ் படையின் இரண்டு அதிகாரிகளில் ஒருவரும், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் முன்னாள் மெய்காவலருமான சிருல் அசார் உமாரை ஆஸ்திரேலிய சிறைச்சாலை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப கடந்த வாரம் விடுதலை செய்தது.
குடிநுழைவு சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 80 க்கும் மேற்பட்ட கைதிகளில் சிருல் அசார் உமார்ரும் ஒருவர் ஆவார்.
மலேசியாவில் ஜாமினில் இருந்த அவர், ஆஸ்திரேலியாவிற்கு தப்பித்துச் செல்லும் போது, அந்நாட்டு குடிநுழைவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டார்.








