தாப்பா, ஜனவரி.12-
தாப்பா, ஜாலான் பீடோர் லாமாவில் டேவான் புக்கிட் பாகார் முன்புறம் இன்று அதிகாலை 6.55 மணியளவில் நடந்த விபத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
அந்த மூதாட்டி சாலையைக் கடக்க முயன்ற போது, தாப்பா நகரை நோக்கி வேலைக்குச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், அவரை மோதித் தள்ளினார்.
அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவருக்கு 20 வயது இருக்கும் என்று தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.
பலத்த காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் மரணத்தை தாப்பா மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள் உறுதிச் செய்தனர். பலத்த காயம் அடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டி, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த விபத்து குறித்து 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அப்துல் மாலிக் தெரிவித்தார்.








